இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் இன்று வெளியான ஃபான்டஸி நகைச்சுவை திரைப்படம் ஜாக்பாட். அக்ஷய பாத்திரம், அப்படியென்றால் ? ... அள்ள அள்ளச் செல்வம் தரும் பொக்கிஷ பெட்டகம். அப்பாத்திரத்தை கதைக்கருவாய் கொண்டு நாம் திரையில் பார்த்து ரசிக்கும் பாத்திரத்தங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண். 

அக்ஷயா மற்றும் சாஷா எனும் பெயரில் கூட்டு களவாணிகளாய் ஊரை ஏய்த்து பிழைக்கும் திருடர்களாக தோன்றியுள்ளார் ஜோதிகா மற்றும் ரேவதி. எதிர்பாராத சமயத்தில் அக்ஷய பாத்திரம் பற்றி இந்த இருவரின் செவிகளுக்கு எட்டுகிறது. அதை இவர்கள் தேடிச் செல்வதும், பின்பு அதை அடைகிறார்களா ? அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறதா என்பது தான் இந்த ஜாக்பாட் படத்தின் கதைச்சுருக்கம்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான பாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் ஜோதிகா, இந்த படத்திலும் அக்ஷயா எனும் ரோலில் ஃபிட் ஆகியுள்ளார். கமர்ஷியல் படத்தில் வரும் துணிச்சலான ஹீரோயின் என்ன என்ன வித்தைகள் கற்று வைத்திருப்பாரோ அதை சரியாக திரையில் செயல் படுத்தியுள்ளார். சில காட்சிகளில் 90ஸில் நாம் பார்த்து ரசித்த ஜோ கண்முன் வந்து செல்கிறார். ஜோதிகாவின் வேகத்திற்கு இணையாக அசத்தியிருந்தார் ரேவதி. நடனம், காமெடி, பஞ்ச் வசனம் என இருவரும் தங்களது வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தின் துவக்கத்திலே கதை இப்படி தான் நகரும் என்பதை தெரிவித்த விதம் பலே. அண்ணாநகர் ரயில் நிலையம், ஃபார்வார்டு மெசேஜ் போன்ற நகைச்சுவை காட்சிகள், கணிக்கப்படும் ஷீரோயிஸம் என லாஜிக் அத்துமீறல் சில ஆங்காங்கே தெரிந்தாலும், ஆனந்தராஜ் & கோ அதை தங்கள் இயல்பான காமெடிகளால் பூர்த்தி செய்கிறது. ஆனந்தராஜுடன் வரும் ரெடின் கிங்ஸ்லீயின் காமெடி பல இடங்களில் கைகுடுத்து உதவியுள்ளது. ரவுடி மானஸ்த்தனாக வரும் ஆனந்த ராஜ் யாரும் எதிர்பார்க்காத ஓர் சர்ப்ரைசையும் வைத்திருக்கிறார். அதை திரையில் கண்டு களியுங்கள்.

கௌரவ தோற்றத்தில் வரும் சமுத்திரக்கனி, யோகிபாபுவின் ஒன்-லைன் காமெடி படத்திற்கு கூடுதல் ருசியை தருகிறது. ஏன் இரண்டாம் பாதி முழுதும் யோகிபாபுவை வைத்தே நகர்கிறது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சபாஷ். பின்னணி இசை வேறொரு படத்தில் கேட்டது போல் இருந்தாலும் படத்திற்கு வலுவை தருகிறது. பாடல்கள் ஓகே.

நகைச்சுவையில் ஃபான்டஸி எனும் விஷயம் கூடுதல் சுவாரஸ்யத்தை அளித்தாலும், மன்சூர் அலிகான், ஜகன், மற்றும் மொட்ட ராஜேந்திரனை சரியாக பயன்படுத்த வில்லை என்ற ஏக்கம் உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் பின்னடைவை தரலாம். படத்தின் ரன்-டைம் சற்று குறைத்திருக்கலாம். வழக்கமான டெம்ப்ளேட் தான் என்று யோசிக்கும் விதத்தில் அமைகிறது.

இப்படி குறை நிறைகள் ஆங்காங்கே இருந்தாலும், நிச்சயம் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகளை வெகுவாக ஈர்க்கும். லாஜிக்குகளை நீக்கிவிட்டு நகைச்சுவை விரும்பியாக பார்த்தால், பார்த்து மகிழும் பொக்கிஷமாக அமைகிறது இந்த ஜாக்பாட்.

கலாட்டா ரேட்டிங் - 2.25/5