மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பால் மிரட்டியிருக்கும் படம் கர்ணன். ஏப்ரல் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் தியேட்டர்களில் குவிந்தார்கள். கர்ணன் படக்குழுவும் அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்து ரசித்தது. 

தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதால் தனுஷ் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இல்லை என்றால் அவரும் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் சேர்ந்து கர்ணனை கொண்டாடியிருப்பார். இருப்பினும் அவர் அமெரிக்காவில் தியேட்டரில் கர்ணன் படத்தை பார்த்திருக்கிறார். கர்ணனை இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே கர்ணன் பற்றி தான் பேச்சாக உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ் கர்ணன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். படம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அநீதிக்கு எதிராக கர்ணன் கொதித்தெழுந்து பார்வைாளர்களை சிந்திக்க வைக்கிறான். சக்திவாய்ந்த படம். நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம் என தெரிவித்துள்ளார். கர்ணன் படத்தை பார்த்துவிட்டு ஒரு போலீஸ் உயர் அதிகாரி பாராட்டியிருப்பது தனுஷ் ரசிகர்களை பெருமை அடைய செய்துள்ளது. 

இந்நிலையில் கர்ணன் படத்தின் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியுள்ளது. அதை பார்த்த ரசிகர்களோ, KarnanBlockBuster என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள். இதனால் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. கர்ணனை கொண்டாடும் ரசிகர்களுக்கு படக்குழு தொடர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

கர்ணன் படத்தின் வசூலுக்கு இரண்டு தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது படம் ரிலீஸான மறுநாளே தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், தமிழக அரசு இது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.