வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

India Cricket Team

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் குவித்தன. இதனால், 75 ரன்கள் முன்னிலையுடன், இந்திய அணி 2 வது இன்னிங்சை விளையாடி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி தரப்பில் ரஹானே சதம் அடித்து அசத்தினார். அவர், அதிகபட்சமாக 242 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அவர் தனது 10 வது சதத்தைப் பதிவு செய்தார். மேலும், விஹாரி 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 93 ரன்களில் அவுட்டானார். இதனால், 7 ரன்களில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார். கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

India Cricket Team

419 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இதனையடுத்து, கெமர் ரோச் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். இதனால், அந்த அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததது.

பும்ரா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால், 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தனது அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில், முன்னிலையில் உள்ளது.