கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம், ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் அசத்தலான வரவேற்பை பெற்றது. பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார். கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். இந்த லாக்டவுனில் ஷூட்டிங் இல்லாமல் சினிமா சார்ந்த பணிகள் கடுமையான நெருக்கடியில் இருப்பதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக சமீபத்தில் தெரிவித்தார்.

தற்போது தில் பேச்சரா படத்தின் டைட்டில் ட்ராக் பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட ஹரிஷ் கல்யாண். பாடலுக்கு ஏற்றார் போல் கீபோர்டும் வாசிக்கிறார். அண்மையில் அதிகம் கேட்கும் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். பிரமாதம் ரஹ்மான் சார். இந்த பாடலை சுஷாந்த் சிங் ராஜ்புட் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாணின் இந்த பதிவின் கீழ் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக டைட்டில் ட்ராக் பாடல் அனைவரையும் ஈர்த்தது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியிருந்தார். இந்த பாடலுக்கு ஃபாரா கான் கோரியோகிராப் செய்திருந்தார். 

சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார். 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் தில் பேச்சரா. இப்படத்தை ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார்.