இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான ஹர்பஜன்சிங், தொடர்ந்து இந்தியாவிற்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் திகழும் ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் பற்றி உள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொண்டார். தற்போது திரைத்துறையின் பக்கம் கவனத்தை செலுத்தி வரும் ஹர்பஜன்சிங், தமிழில் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து தமிழக ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்து வருகிறார் ஹர்பஜன் சிங்.

இந்நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா தம்பதிக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா தம்பதிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3)