கடந்த வருடம் டிசம்பரில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்த திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை ரசித்தனர். சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நான்கு காதல் கதைகளை கொண்டு அமைந்த இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய்கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்த்திருந்தனர். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்தார். காலத்தால் அழியாத இந்த காவியத்தை இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கினார். பூவரசம் பீப்பி படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். 

பிரபல இணையவாசி ஒருவர், சூர்யா ஜோதிகா மீண்டும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும். அந்த படம் சார்லி, கும்பலங்கி நைட்ஸ் போன்று சிறப்பான படைப்பாக இருக்க வேண்டும். இதை இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கினால் சரியாக இருக்கும் என்று கூற, கமெண்டில் விரைந்த ரசிகர்கள், தங்களது கனவு கோட்டையை கட்டத்துவங்கினர். இதற்கு பதிலளித்த ஹலீதா, ஸ்மைலி ஒன்றை கமெண்ட் செய்து விட்டுவிட்டார். 

அதன் பின், ரசிகர் ஒருவர் சூர்யா மற்றும் ஜோதிகா விற்கென ஏதாவது ஸ்கிரிப்ட் உள்ளதா ? என்று கேட்க... கண்டிப்பாக அவர்களுக்கு நான் ஸ்கிரிப்ட்டை கூறுவேன் என்று இன்பதிர்ச்சி தந்துள்ளார். சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்த சூர்யா ஜோதிகா, ஹலீதாவை பாராட்டியது அனைவரும் அறிந்ததே. ஹலீதாவின் எழுத்துத்திறனை அவர்கள் பாராட்டியதும் திரை விரும்பிகள் அறிந்ததே. விரைவில் இந்த காம்போ இணையுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள். 

ஹலீதா கைவசம் ஏலே மற்றும் மின்மினி போன்ற படங்கள் உள்ளது. ஏலே படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கபீர் வாசுகி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஒய் நாட் பிலிம்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, புஷ்கர் - காயத்ரி தங்களது வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரிக்கின்றனர்.