தமிழ் திரையுலகில் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். 

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று, விஜய் இயக்கத்தில் தலைவி மற்றும் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

சர்வதேச போதை ஒழிப்பு நாளான இன்று, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கி ஒளிப்பதிவு செய்த இந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார். மதன் கார்க்கி இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். கவின் ஆதித்யா இதை எடிட் செய்துள்ளார். ஏற்கனவே சர்வம் தாளமயம் படத்தில் ஜிவி பிரகாஷை இயக்கியதால், இந்த கூட்டணி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

அதிக இளைஞர்களை ரசிகர்களாக கொண்டுள்ள நாயகன் ஜிவி பிரகாஷ், அவர் இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபடுவது அவரது ரசிகர்களை நல்ல வழியில் செயல்பட வைக்கும் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ்.