2019-ம் ஆண்டு முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் தர்ம பிரபு. வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை பி.ரங்கநாதன் தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்புக்காகக் கதைகள் கேட்டு வந்தார்.

இதில் நந்தா பெரியசாமி சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே பணிகள் தொடங்கப்பட்டது. குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும் இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் நாயகியாக டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷிவாத்மிகா நடிக்கவுள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இவர்களுடன் டேனியல் பாலாஜி, சரவணன், 'கிழக்கு சீமையிலே' விக்னேஷ் , சிங்கம் புலி, ஜோமல்லூரி, கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், விஜய் டிவி ஜாக்குலின், மௌனிகா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக பொர்ரா பாலபரணி, இசையமைப்பாளராக சித்துகுமார் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வில் படக்குழுவினர் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தியில் தாப்ஸி நடிப்பில் உருவாகி வரும் ராஷ்மி ராக்கெட் படத்தின் கதை நந்தா பெரியசாமி எழுதியது தான் என்பது நினைவு கூரத்தக்கது.