கருப்பு வெள்ளை காலம் துவங்கி மோஷன் கேப்ச்சர் வரை பல வித்தியாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் திரைத்துறை வளர்ந்து கொண்டே இருக்கிறது. பணக்காரன் முதல் பாமரன் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் மூன்றெழுத்து மந்திரம் தான் இந்த சினிமா. இந்திய சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தியதில் தமிழ் சினிமாவிற்கென தனி பங்குண்டு. 

Galatta Special Article King Role In Tamil Cinema

என்னதான் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற தளங்களில் படங்களை பார்த்து அனல்பறக்க விமர்சனம் கூறும் ஆன்லைன் வாசியாக இருந்தாலும், நிம்மதியாக குடும்பத்துடன் சேர்ந்து திரைப்படங்களை பார்த்து ரசித்த சுகம் தனிதான். திரைப்படங்களில் பல ஜானர்கள் இருந்தாலும், ராஜா காலத்து படம் என்றால் தனி ஸ்பெஷல் தான். அப்படியென்ன இருக்கு இதுல என்று கேட்போருக்கு கீழ் உள்ள பத்திகள் பதில் கூறும். 

Galatta Special Article King Role In Tamil Cinema

ராஜாதி ராஜா, ராஜா கம்பீர, ராஜா மார்த்தாண்ட என்று செவிகளில் ஒலிக்கும் ராஜா என்ட்ரி, ஊர் மக்களுக்கு நினைத்த உதவிகள் செய்வது, குதிரைகளில் உலா வருவது, பிரம்மாண்ட இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்வது, யார் அங்கே என்று கேட்டவுடன் ஓடி வரும் பணியாட்கள் என ஃபேன்டஸி நிறைந்த உலகமாக திகழும். 

Galatta Special Article King Role In Tamil Cinema

தமிழ் சினிமாவில் சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை ராஜா வேடத்தில் பல நடிகர்கள் நடித்துவிட்டனர். மன்னர், அரசர், இளவரசர் என பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தங்களை தயார் செய்து கொள்கின்றனர் நடிகர் நடிகையர்கள். பாகுபலி, கோச்சடையான் போன்ற படங்கள் அதற்கான ஃபார்முலாவை வகுத்து தந்தது. ஒரு மன்னரின் வாழ்க்கையை படமாக காட்டுவது என்பது சாதாரண காரியம் இல்லை. அவர்களது வாழ்க்கை முறை எப்படியிருக்கும் ? ராஜாக்கள் எப்படியிருப்பார்கள், எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொள்வார்கள், மக்களிடம் எப்படி பழகுவார்கள் ? என்ற கேள்வியெல்லாம் சிந்தையில் பட இது பற்றி திரைவிரும்பிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று நினைத்தோம். சரியான தருணத்தில் இந்த தலைப்பிற்கு கைகுடுத்து உதவினார் இயக்குனர் பொன்ராம்

Galatta Special Article King Role In Tamil Cinema

சீமராஜா திரைப்படத்தில் கதாநாயகனை ராஜாவாக வடிவமைத்திருப்பார் இயக்குனர் பொன்ராம். இக்காலத்தில் இது எப்படி சாத்தியமானது என்று அவரிடம் கேட்க, தனது திரைப்பயணத்தில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான எபிசோடுகளை நம்முடன் பகிர்ந்தார். அவர் கூறுகையில், நம் நாட்டை ஆண்ட ஜமீன்கள் பலரின் கதைகளை பார்த்தேன். அதில் தமிழ் ஜமீனின் கதையை ரசிகர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று சிங்கம்பட்டி ராஜாவான முருகதாஸ் தீர்த்தபதி அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். 

நேரில் சந்தித்தபோது, அவரது தமிழ் ஆளுமையையும், இலக்கிய அறிவையும் கண்டு வியந்தேன். மூன்றறை வயது குழந்தையாக இருக்கும் போது அவருக்கு முடிசூட்டப்பட்டதாம். இங்கு இருந்தால் வேண்டாதோர் அவரை அழித்து விடுவார்களோ என்பதினால், சிறு வயதிலேயே அவரை இலங்கைக்கு படிக்க அனுப்பி வைத்தார்களாம். ராஜாவிற்கு திரைப்படங்கள் குறித்த அறிவும் அதிகமாக இருந்ததாம். அரண்மனைக்கு என இருக்கும் மரியாதை, ராஜா வீட்டு உபசரிப்பு போன்றவற்றை கண்டு பிரமித்தேன். அரண்மனை தண்டனை வழக்கத்தையும் தெரிந்துகொண்டேன். பழங்காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வோரை, கட்டி வைத்து ஆட்டுத் தோலை உரித்து உப்பை தடவி வெயிலில் காட்டி அதை சிலுமிஷம் செய்வோரின் முதுகில் வைப்பார்களாம். நாளடைவில் மக்கள் ஒழுங்காக இருந்ததால், அது போன்ற தண்டனைகளை நீக்கினார்களாம். சிங்கம்பட்டி ராஜா நல்ல உடல் கட்டமைப்புடன் காணப்பட்டார் அதற்கு ஏற்றார் போல் தான் சீமராஜா படத்தில் நெப்போலியன் அவர்களை நடிக்க வைத்தோம். 

ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்று, சொரிமுத்து அய்யனார் கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்நாளில் ராஜா அலங்காரத்துடன் பட்டாடை அணிந்து மக்கள் முன் காட்சியளிப்பார். அப்போது வளரி, வால் வீச்சு போன்ற கலைகளில் சிறந்து விளங்குவோருக்கு பரிசளித்து மகிழ்வார் என்று ராஜாவுடன் பழகிய நாட்கள் குறித்தும், அவர்களது வாழ்வியல் முறை குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பொன்ராம். 

கேட்கவே உடம்பு சிலிர்கிறது. இதே போல் தொடர்ச்சியாக நம் நாட்டில் வாழ்ந்த ராஜாக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படங்கள் வெளியானால் வரலாற்றை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ராஜா கைய்ய வச்சா அது ராங்கா போனதில்ல... கலாட்டா சுவடுகளில் இன்னும் பல ருசிகர தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்... நன்றியுடன் கலாட்டா நிருபர் சக்தி பிரியன்.