காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் சென்னையில் முதன் முறையாக மின்சார பேருந்தின் சோதனை முறை சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதன்படி சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை, சுமார் 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார பேருந்துகள் நேற்று முதல் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து ‘ஏ1’ வழித்தடமான மயிலாப்பூர், அடையார் வழியாக திருவான்மியூர் வரை, காலை 2 முறையும், மாலை 2 முறையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

electric bus

இந்த மின்சார பேருந்தில், 32 பேர் அமர்ந்தும், 22 பேர் நின்றுகொண்டும் என ஒரே நேரத்தில் மொத்தம் 54 பேர் வரை பயணிக்க முடியும். முழுமையாகக் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இப்பேருந்தில், தானியங்கி கதவுகளும், வழித்தடங்களை அறியக்கூடிய ஜி.பி.எஸ். வசதியும் பொருத்தப்பட்டுள்ளன.

இன்று 2வது நாளாக இயக்கப்பட்ட இப்பேருந்தில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். இப்பேருந்தில் பயணம் செய்யக் குறைந்தபட்ச கட்டணமாக 11 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்தில் எவ்வளவு வேகமாக இயக்க முடியுமோ, அதே அளவுக்கு இந்த பேருந்தையும் இயக்க முடியும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

electric bus

குறிப்பாக, இந்த மின்சார பேருந்துகளை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 320 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் என்றும், ஆனால் சோதனை ஓட்டமாக நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை இயக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக, இந்த பேருந்தினை சார்ஜிங் செய்யும் வசதிக்கா, பல்லவன் இல்லத்தின் அருகில் உள்ள மத்திய போக்குவரத்துப் பணி மனையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

electric bus

சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய ஊர்களிலும் மொத்தம் 525 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.