முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்ல உள்ள நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edappadi K Palaniswami

தமிழகம் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு, மந்த நிலையை அடைந்துள்ளன. இதனால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஈடுசெய்யும் நோக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இதில், மாநாடு மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம், தமிழகத்தின் புலம்பெயர்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து அவர்களின் முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தொடங்கவுள்ள இந்த வெளிநாட்டுப் பயணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் முதலமைச்சருடன் செல்கின்றனர். இதன் மூலம், தமிழகத்துக்கு அதிகப்படியான முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Edappadi K Palaniswami

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்லும் இந்த 14 நாட்களும், தமிழ்நாட்டிற்கு யார் பொறுப்பு முதலமைச்சராகச் செயல்படுவார்கள் என்று கேள்வி ஆளும் கட்சி வட்டாரத்தில் எழுந்தது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் வேலுமணி ஆகியோர்களின் பெயர்கள் அதிமுக வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டன. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, யாரையும் நம்பாத நிலையில், பொறுப்பு முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி நோ சொல்லிவிட்டார்.

இதனால், வெளிநாடுகளில் இருந்த படியே, எல்லா வேலைகளையும் முதலமைச்சர் கவனித்துக்கொள்வார் என்றும், முக்கியமான கோப்புகள் இருந்தால், அவற்றை இமெயில் மற்றும் ஃபேக்ஸ் மூலம் கையெழுத்து வாங்கப்பட்டு, உடனுக்குடன் செயல்படுத்தப்படும் வகையிலும் முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.