நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆராத்யா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இவர்களை தொடர்ந்து புரட்சி தளபதி விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா வந்தது. ஆயுர்வேத மருந்துகள் மூலம் இருவரும் அதிலிருந்து மீண்டனர். இந்தநிலையில், இன்று தெலுங்கு பட பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில் எங்களுக்கு லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து அவர், எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நலமாக உள்ளோம். ஆனால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். அப்போதுதான் ப்ளாஸ்மா செல்களை தானம் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸில் பிரபாஸ் மற்றும் ராணா மோதிக்கொள்ளும் காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல உருவாக்கப்பட்டிருந்த வீடியோவை வெளியிட்டிருந்தார் ராஜமௌலி. மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். நீங்களும் மறந்து விடாதீர்கள் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார். 

பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் தியாகி அல்லுரி சித்தாராம ராஜுவாகவும், என்டிஆர் தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். பெரும் பொருட் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது.