எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். டிப்ரஷன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அவருடைய மரணம், சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இன்னும் அதிலிருந்து மீளாமல் தவிக்கின்றனர் திரை விரும்பிகள். 

அவருடைய கடைசி ஹிந்திப் படமான தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் தில் பேச்சரா. 

டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்தது.இதற்கு முன்பு யு-ட்யுபில் வெளியான சினிமா டிரைலர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் டிரைலர் மொத்தமாக 3.6 மில்லியன் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 24 மணி நேரத்திற்குள்ளாகவே தில் பேச்சரா டிரைலர் முறியடித்துள்ளது. இதை AR ரஹ்மான் பாராட்டியும் பதிவு செய்தார்.

ட்ரைலரை பார்த்து விட்டு, காதலின் அழகிய வெளிப்பாடாக இந்த படம் அமைந்துள்ளது. இதை பார்க்க சுஷாந்த் உயிருடன் இல்லையே. ட்ரெய்லரில் சுஷாந்த் சிரிப்பதை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. பாலிவுட்காரர்களின் வெறுப்பால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது. சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் என்றெல்லாம் கமெண்ட் செய்தனர் சுஷாந்த் ரசிகர்கள். 

தற்போது படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் நாளை 12 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் இசை பிரியர்கள். டைட்டில் பாடலின் ப்ரோமோவும் வெளியாகி ஈர்த்து வருகிறது. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் சுஷாந்த் இருப்பார். 

இப்படத்தை ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார். டிஸ்னி ஹாட்ஸ்டாரைப் பார்க்க சந்தாதாரர்களாக இல்லாமல் இருப்பவர்களும் இந்தியாவில் இப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம். ஸ்டார் டிவியில் Kis Desh Mein Hai Meraa Dil என்ற நிகழ்ச்சியின் மூலம் கலையுலகில் தன் பயணத்தைத் துவக்கியவர் சுஷாந்த் சிங். அவருடைய கடைசி படத்தை ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.