தில் பேச்சரா படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் நேற்று வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் ப்ரீமியராகும் போது இசையமைப்பாளர் AR ரஹ்மான் தோன்றி இன்பதிர்ச்சி தந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஃபாரா கான் கோரியோகிராப் செய்துள்ளார். பாடல் ரிலீஸை சுஷாந்த் ரசிகர்கள் கொண்டாடினர். சுஷாந்தின் நடனம் பார்வையாளர்களை ஈர்த்தது. 

தற்போது பாடலின் மேக்கிங் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஃபாரா கான் பதிவு செய்துள்ளார். ஃபாரா கான் சொல்லித்தரும் ஸ்டெப்புகளை எளிதில் புரிந்து கொண்டு நடனத்தில் அசத்துகிறார் சுஷாந்த். இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபாரா கானின் இந்த பதிவின் கீழ், சுஷாந்த் மறைவுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் தில் பேச்சரா. 

ட்ரைலரை பார்த்து விட்டு, காதலின் அழகிய வெளிப்பாடாக இந்த படம் அமைந்துள்ளது. இதை பார்க்க சுஷாந்த் உயிருடன் இல்லையே. ட்ரெய்லரில் சுஷாந்த் சிரிப்பதை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. பாலிவுட்காரர்களின் வெறுப்பால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது. சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் என்றெல்லாம் கமெண்ட் செய்தனர் சுஷாந்த் ரசிகர்கள். 

இப்படத்தை ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார். டிஸ்னி ஹாட்ஸ்டாரைப் பார்க்க சந்தாதாரர்களாக இல்லாமல் இருப்பவர்களும் இந்தியாவில் இப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம்.