கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் இறங்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ், லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே படப்பிடிப்பு பணிகளில் இறங்குவார் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸும் உள்ளது. 

சமீபத்தில் சியான் 60 படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல் வெளியானது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று ருசிகர தகவல் கிடைத்தது. லாக்டவுனில் சியான் 60 தொடர்பான பல செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது. படத்தில் சியான் விக்ரம் வில்லனாக நடிக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் கிளம்பியது. ஆனால் இச்செய்தி வெறும் வதந்தியே. ஸ்கிரிப்ட் பணியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இன்னும் எதையும் உறுதி செய்யவில்லை என்பது தான் தற்போதைய நிலவரம். 

இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒர்க்அவுட் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை ஈர்த்து வருகிறது. அதில் கட்டுடலுடன் காணப்படுகிறார் துருவ். சியான் 60 படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே படத்திற்கான கேரக்டருக்கு தயாராகிறாரா துருவ் என கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

படத்திற்கு படம் தன்னை வருத்திக்கொண்டு, அந்த பாத்திரமாகவே மாறும் திறன் கொண்டவர் சியான் விக்ரம். அவரது பாணியை துருவ் கடைபிடிப்பது பாராட்டிற்குரியது.