கடந்தாண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் பரியேறும் பெருமாள் முக்கியமான படைப்பு. காலிவுட் வட்டாரத்தில் கொண்டாடப்பட்ட அப்படம், இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது. 

பரியேறும் பெருமாளின் ஏகோபித்த வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முக்கியமான இயக்குனராக்கியுள்ளது. இதையடுத்து மாரிசெல்வராஜ் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி S தானு தயாரிக்க இருக்கிறார். இந்தப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில் திரைக்கதை அமைக்கும் பணிகளை மாரி செல்வராஜ் மேற்கொண்டு வந்தார்.

இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜிடம் கேட்டபோது, டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. பேச்சில் தான் உள்ளது என்று தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் அக்டோபர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக கூறினார்.