மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் நடந்து முடிந்தது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ் நாராயணன். 

தற்போது தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மக்கள் ஒன்றாக கத்தியை பிடித்த மாதிரி இந்த போஸ்டரில் உள்ளது. பின்னணியில் மலை உச்சியில் காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் சாமானிய மக்கள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மலை வாழ் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோவை இன்று மாலை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். தனுஷ் பிறந்தநாளில் அவரை வாழ்த்தியும் பதிவு ஒன்றை செய்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. 

தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கர்ணன் படத்தில் தனுஷ் எனும் கலைஞனை மாரி செல்வராஜ் எப்படி செதுக்கியிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து நடிகர் நட்டி ஓர் பதிவை செய்திருந்தார். அதில் படம் ரிலீஸ் ஆகட்டும்... கொண்டாடுவீங்க என்று படத்தின் தரத்தையும், மாரி செல்வராஜின் திறனையும் பாராட்டினார் நட்டி. 

கர்ணன் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் தனுஷ் பிறந்தநாளான இன்று காலை வெளியானது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.