படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்த திரைப்படம் ஜகமே தந்திரம்.YNOT ஸ்டூடியோஸ் சார்பில் திரு.சசிகாந்த் தயாரித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க புகழ்மிக்க ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.முன்னதாக ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. 

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் அதிரடியான கேங்க்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்த ஜகமே தந்திரம் ,தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது உலக அளவில் மிகப்பெரிய சாதனையை ஜகமே தந்திரம் திரைப்படம் படைத்துள்ளது. 

கடந்த ஜூன் 18-ஆம் தேதி வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் மக்களின் கவனத்தை ஈர்த்து இந்தியா இல்லாமல் மற்ற 12 நாடுகளில் நெட்பிளிக்ஸ்-ன் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியா மலேசியா துபாய் உட்பட ஏழு நாடுகளில் டாப் 10 பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இந்த முதல் வாரத்தில் மட்டுமே ஜகமே தந்திரம் திரைப்படத்தைப் பார்த்த மொத்த பார்வையாளர்களின் பாதிப்பேர் இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் வெளிநாட்டு பார்வையாளர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நெட்பிளிக்ஸ் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படைத்திருக்கும் இந்த உலக அளவிலான சாதனை இந்தியத் திரையுலகிலும் தமிழ் திரையுலகிலும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.