2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதனையடுத்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்காலிக தலைவராக தற்போது தொடர்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டிருக்கிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றார்கள். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை இன்னும் பலவீனப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழும் ப.சிதம்பரத்தின் அஸ்திவாரத்தையே அசத்திப் பார்த்திருக்கிறது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு. இந்த வழக்கில் மத்திய அரசு காட்டும் வேகம், நாட்டின் முக்கிய எதிர்க் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

P Chidambaram

கடந்த 2007- ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போதே சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும், முதலீடு பெற்ற நிறுவனத்தை, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இதன் மூலம் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்கள் பலன் பெற்றதாக சிபிஐ தொடக்கம் முதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்பு ஏற்கனவே நேரில் ஆஜராகிப் பல முறை விளக்கம் அளித்திருந்த நிலையில், அப்பொழுதெல்லாம் அவரை கைது செய்யாமல் இருந்த அதிகாரிகள், தற்போது அவர் வீட்டில் இல்லாதபோது, அவரை கைது செய்யச் சென்றது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

P Chidambaram

இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ரமணா அமர்வில் அவசர வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார். இதனையடுத்து, ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மாலை 4 மணிக்குத் தலைமை நீதிபதியிடம் முறையிட முடிவு செய்துள்ளார்.

இதனிடையே, பாஜக தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக மீண்டும் பதவி ஏற்றது முதல், ப.சிதம்பரம் தொடர்பான வழக்குகள் வேகம் பிடித்துள்ளன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு வழக்கப்படும் ஜாமீன் முடிவு மற்றும் வழக்கின் போக்கே ப.சிதம்பரத்தின் எதிர்கால அரசியலையும், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கும்.

ப.சிதம்பரம் மீதான வழக்கின் வேகம்.. காங்கிரசாரின் சோகம்..!

P Chidambaram

https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/general-images/1566388368P_Chidambaram_PTI.jpg