சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லாமல் இருந்தாலும் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். சில தினங்களுக்கு முன் ரியல் பிராண்ட் தல அஜித் என ட்ரெண்ட் செய்தனர். அதன் பின் நடிகர் பிரித்விராஜ் பப்லூ அஜித்துடன் தனது நட்பு குறித்து கூறிய வீடியோ ஒன்று வைரலாகி இணையத்தை அசத்தியது. 

கொரோனா நேரத்தில் திரைத்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் கவலைக்கிடமாக உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் சினிமா சார்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி குறைந்த நபர்கள் கொண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் சம்பளம் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. 

தல அஜித்தின் ஒரு நாள் சம்பளம் ஒரு கோடி என ஒரு பத்திரிக்கை வெளியிட்ட தவறான செய்தியால் அதிர்ச்சியானார்கள் ரசிகர்கள். இதுகுறித்து அஜித் தரப்பினரிடம் கலாட்டா சிறப்பு குழு கேட்கையில், இச்செய்தி தவறானது. இது போன்ற செய்திகளை தவிர்த்திடுங்கள் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். எப்போதும் தன்னுடன் பணிபுரிவோர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் திகழ்பவர் அஜித்.

என்றும் தயாரிப்பாளர்களின் நலன் கருதி சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர். ஆகையால் அஜித்தின் சம்பளம் அவர் பணிபுரியும் தயாரிப்பு நிறுவனங்கள் எடுக்கும் முடிவிலே உள்ளது என்பதை தெளிவு செய்தனர். 

கடந்த ஆண்டு சிவா இயக்கத்தில் விஸ்வாசம் மற்றும் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்களில் நடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். 

கொரோனா வைரஸ் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங்கில் பங்கேற்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா பரவி வரும் இந்த சூழலில் அரசுக்கு உதவி செய்யும் நோக்கில், ட்ரோன்களைப் பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தக்ஷா குழுவுடன் இணைந்துள்ளார் அஜித்.