மதுரையில் பச்சிளம் குழந்தைக் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜீவா நகர் முதல் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள், குப்பைத் தொட்டியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, பிறந்து சில மணி நேரங்களே ஆன, பச்சிளம் ஆண் குழந்தைக் குப்பைத் தொட்டியில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

child

இதனையடுத்து, குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மீட்கப்பட்ட குழந்தை குறித்து போலீசாரிடம் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, அனுமதிக்க முடியும் என்று அரசு ராஜாஜி மருத்துவமனை தரப்பில் கூறி அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அந்த குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, குழந்தைக் குப்பைத் தொட்டில் வீசப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.