சென்னை அண்ணா சாலை 2 நாள் சோதனை ஓட்டமாக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக, கடந்த 2012 ஆண்டு முதல் அண்ணா சாலையானது ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனையடுத்து, மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்த நிலையில், படிப்படியாக இரு வழி பத்தையாக மாற்றப்பட்டாலும், எல்.ஐ.சி. முதல் ஜெமினி பாலத்திற்கு முந்தின சிக்னல் வரை மாற்றப்படாமல், ஒரு வழிப்பாதையாக மட்டுமே இருந்தது.

Mount Road two way

இந்நிலையில், அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முற்றிலும் முடிந்ததால், இரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று அறிவித்தனர். அதன்படி, அண்ணா சாலை இன்றும், நாளையும் 2 நாள் சோதனை ஓட்டமாக இருவழிப்பாதையாக மாற்றப்படும் என்று அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்குப் போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் 2 நாள் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த இருவழிச் சாலை மாற்றமானது, அண்ணா சாலை ஐ.பி.ரோடு முதல், ஒயிட்ஸ் ரோடு வரை இருவழிச்சாலையாக மீண்டும் மாற்றப்பட்டது.

இதில், ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனப் போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், அண்ணா சிலையிலிருந்து ஜெமினி பாலம், தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம்.

Mount Road two way

குறிப்பாக, ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒரு வழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், வெலிங்டன் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்லத் தடை செய்யப்படுகிறது. இதனால், ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

Mount Road two way

ராயப்பேட்டையில் மணிக்கூண்டிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.

இருவழிப் பாதை மாற்றப்பட்டதை அறியாத அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள், இதனால் குழப்பமடைந்தனர். சிலர், மீண்டும் அடுத்த சிக்னல் வரை சென்று சுற்றிவிட்டு, அலுவலகம் சென்றனர்.