காதலிக்கு செலவு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டு இளைஞர் ஒருவர் சினிமா படப் பாணியில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் தனுஷ் நடித்த “தேவதையை கண்டேன்” படத்தில் வருவது போல், காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னையில் காதலன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

love failure

சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த 21 வயதான மெக்கானிக் விக்கி, நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் போலீஸ் ஸ்டேசனுக்கு குடிபோதையில் வந்துள்ளார். அங்கு, “தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் ஆனால், அந்த பெண் தன்னை காதலித்து விட்டு தற்போது காதலிக்க மறுப்பதாகவும்” குற்றம் சாட்டினார். இதனால், தன் காதலி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காதலிக்கு தான் செலவு செய்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திரும்ப வாய்கி தருமாறும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குடிபோதையில் அந்த இளைஞர் உளறுவதாக நினைத்த போலீசார், அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து, கையில் அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட போலீஸ் ஸ்டேசன் வாசலில் நின்று, காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால், போலீசார் அதையும் பொருட்படுத்தாமல் நின்றதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தினர்.

அப்போது, காதலிக்காகத் தான் இதுவரை செலவு செய்த 3 ஆயிரம் ரூபாயைத் திரும்பப் பெற்றுத் தாருங்கள் என்று பதில் அளித்துள்ளார். இதனால், அதிர்ந்துபோன போலீசார், செய்வதறியாது தவித்து அவனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, போதை இறங்கிய உடன் மீண்டும் வரச்சொல்லி அனுப்பி வைத்தனர்.

இதை ஏற்றுக்கொள்ளாத அந்த இளைஞர், தனக்கு இங்கு நியாயம் கிடைக்காது என்றும், காதலியின் வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்தினால் தான் நியாயம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால், மதுரவாயல் காவல் நிலைய வாசலில் பரபரப்பு ஏற்பட்டது.