ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி திறந்து வைத்த புதிய சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே இரவு தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதனால், ப.சிதம்பரம் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

PChidambaram

ப.சிதம்பரத்தைக் கைது செய்து சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்ததும், முதல் வேலையாக அவருக்கு மருத்துவர்கள் குழு, மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் சில நிமிடங்கள் மட்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, இரவு நேரம் ஆனதால், அவரது வயது மற்றும் மூப்பு காரணமாக அவருக்கு இரவு முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிகாலையே சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிகிறது. இதில், முதற்கட்டமாக அவரிடம் சில முக்கியமான அடிப்படை கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ப.சிதம்பரத்தை, இன்று பிற்பகல் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.

PChidambaram

அப்போது, ப.சிதம்பரத்தை 10 முதல் 15 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இதுவரை ப.சிதம்பரம் முறையாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாகவும், அவரது தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, சி.பி.ஐ.யிடம் சிக்கித் தவிக்கும் ப.சிதம்பரத்தை வெளியே எடுக்கக் காங்கிரஸ் கட்சியும் பல முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.