தமிழ் திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இதன் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது காலம் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டு, அதற்கு பிறகு அது பொய்யான மிரட்டல் என்பது சோதனையில் தெரிய வந்த நிலையில், தற்போது இதே போல தல அஜித்தின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதறியடித்துள்ளனர் தல ரசிகர்கள். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வெடி குண்டு இருப்பதாக மர்ம நபர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டிற்கு சென்று, சோதனையில் ஈடுபட்டனர். 

பின் அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது. அதனால் சோதனையை முடித்துக் கொண்ட போலீசார், போன் செய்த நபர் யார் என்பதை பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு நபர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவரை விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் பாம் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக உடனே போலீசார் ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொள்ள இருந்தனர். முழுமையாக சோதனை மேற்கொண்ட பிறகு இந்த மிரட்டல் முற்றிலும் பொய் என்பது தெரிய வந்தது.

சில வாரங்களுக்கு முன்பு தளபதி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அவரது சாலி கிராமத்து வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கூறினார். இதனையடுத்து அங்கு சென்று போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உடன் சோதனை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த நபர் பற்றி விசாரணை நடத்திய போலீசார் விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் சரியில்லாத ஒருவர் தான் இப்படி போன் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

லாக்டவுனில் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒருபுறம் கொரோனா தொற்று இருந்தாலும், இன்னொரு புறம் இதுபோன்ற சம்பவங்கள் திரைப்பிரபலங்களை அச்சுறுத்தி வருகிறது. அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்பதை மர்ம நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.