ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி நடித்திருக்கும் திரைப்படம் யாருக்கும் அஞ்சேல். புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமான யாருக்கும் அஞ்சேல் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாகவும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர். 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த போஸ்டரை வெளியிட்டார். விஜய்சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை வழங்குகிறது. சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியாகராஜன் எடிட் செய்கிறார். ராஜன் ராதாமனாலன் வசனம் எழுதியுள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் துவங்கி இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் STR இணைந்து படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டனர். தேவராஜலு மார்கண்டேயன் இந்த படத்தை தயாரிக்கிறார். பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க ஊட்டி பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. கடந்த மாதம் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தது. பிந்து மாதவி தன் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார். யாருக்கும் அஞ்சேல் படத்தின் ரீரெகார்டிங் பணிகள் துவங்கியுள்ளது. இதனால் விரைவில் படத்தின் பாடல் மற்றும் டீஸர் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ரீரெகார்டிங் செய்யும் வீடியோவை தனது முகநூல் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் இயக்குனர். 

கழுகு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிந்து மாதவி.  அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் இவரது திரைப்பயணத்திற்கு கைக்கொடுத்தது. பின் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டார். 

இதன் மூலம் மக்கள் மனதில் நன்கு பதிந்த பிந்து மாதவி, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. இறுதியாக 2019ம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.