விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருகிறார்.மேலும் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் களமிறங்குகிறார்.

பேம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் 3:33 படத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் இப்படத்தை இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ளார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவில் தீபக்.S.த்வாரக் படத்தொகுப்பு செய்துள்ள 3:33 படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.

3:33 படத்தில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து சரவணன், ரமா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஸ்ருதி செல்வம், மைம் கோபி ஆகியோருடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் 3:33 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியானது.

முன்னதாக 3:33 திரைப்படம் வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், “தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போவதாக” தயாரிப்பு நிறுவனமான பேம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் “இருக்கையின் நுனியில் அமர்ந்து திகிலான அனுபவத்தை உணரக்கூடிய 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் அதுவரை காத்திருக்கவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.