குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி. வளர்ந்த பிறகு வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சயில் விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும், நடிகர் கணேஷ்கருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்ற லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி இந்த ஊரடங்கில் நல்ல முடிவை எடுத்தார். ஒரு வருடத்திற்கு நான் நடிக்கின்ற படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கி கொள்கிறேன் என்று கூறினார். ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும்.  என்னோட சின்ன பங்களிப்பு இது என்று முடிவெடுத்தார். 

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆர்த்தி,ஃபேஸ்ஆப் சேலஞ்சை ஏற்று தன் புகைப்படத்தை ஆண் போன்று மாற்றி புகைப்படத்தை வெளியிட்டார். அதை ட்விட்டரில் வெளியிட்டு, இவர் தான் என் புது காதலர், என் க்யூட் டார்லிங். இவரை தான் நான் திருமணம் செய்யப் போகிறேன். சாரி கணேஷ்கர் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

சமூக வலைத்தளங்களில் ஆர்த்தி காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார். அது தான் ரசிகர்களுக்கு ஆர்த்தியிடம் பிடித்த விஷயம். தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வராது என்று பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார். தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வந்தார். 

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. தனுஷ் போல் வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து அட்டகாசமாக நடனமாடியுள்ளனர்.  

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். 

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டது படக்குழு. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது இப்பாடல். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளனர். லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் உள்ளது. 

சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் படத்தின் ரிலீஸ் குறித்து விளக்கமளித்தார். தியேட்டர்கள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம். ரகிட ரகிட என தனுஷ் பாடுவதை திரையரங்கில் காண ஒட்டு மொத்த குழுவும் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பதை தயாரிப்பாளர் உறுதி செய்தார்.