பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்தார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் பொங்கல் விருந்தாக சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. 11 ஜதை குத்துச்சண்டை என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரையை சார்ந்த ரேவ் கண்டெடுத்த வைரமாக கபிலன் (ஆர்யா) அவரை எதிர்த்து இடியாப்ப பரம்பரையை சார்ந்த பாயும் புலி வேம்புலி (ஜான் கொக்கேன்) மோதுகின்றனர். 

படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ஆர்யா கைவசம் டெடி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதன் பின் சுந்தர்.சி இயக்கத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பை முடித்தார். தற்போது விஷால் நடிக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஷூட்டிங்கின் போது ஆர்யாவுக்கு காயம் ஏற்பட்டு சரியானது குறிப்பிடத்தக்கது. 

எனிமி படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலின் லுக் கொண்ட போஸ்டர் டிசம்பர் 17-ம் தேதி வெளியானது. கையில் துப்பாக்கியுடன் மாஸான லுக்கில் இருந்தார் புரட்சி தளபதி விஷால். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் மலேசியாவில் முக்கிய காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு.