ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலின் லுக் கொண்ட போஸ்டர் டிசம்பர் 17-ம் தேதி வெளியானது. கையில் துப்பாக்கியுடன் மாஸான லுக்கில் இருந்தார் புரட்சி தளபதி விஷால்.

இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஷாலுக்கும் ஆர்யாவுக்குமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரும் டூப் இல்லாமல் நடித்து வருகின்றனர்.

இந்த படப்பிடிப்பின் போது ஆர்யாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, ஆர்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. டூப் இல்லாமல் நடித்ததே இதன் காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர்கள் துணிச்சலாக சில ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் போது, இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுது. கவனமாக இருங்க ஆர்யா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். 

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட படப்பிடிப்பின் போதே படத்தின் ஓப்பனிங் சாங்கை முடித்தனர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 

படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஊட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்கினர் படக்குழுவினர். விரைவில் மலேசியாவில் முக்கிய காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. 

இதற்கு முன்பு பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்தார் ஆர்யா. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.