திரையுலக ரசிகர்களின் ஃபேவரைட்டான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். பாடல்களில் கேமியோ, கான்செர்ட் மேடைகளில் நடனம் என ஜொலித்து கொண்டிருப்பதால் ராக்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் அறிமுகமானவர், இன்று பிஸியான இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பெருமையையும் பெற்றுள்ளார். 

இன்று அனிருத்தின் பிறந்தநாள். உலகமே கொண்டாடும் இந்த ராக்ஸ்டாரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் தனுஷையே சேரும். 8 வருடம் டைம் ட்ராவல் செய்து பார்த்தால் தெரியும்... வை திஸ் கொலவெறி எனும் பாடல். அனிருத் எனும் யங்ஸ்டரை உலகமே கொண்டாடிய தருணம். அப்போ ஆரம்பித்தது தான் இந்த DNA ஃபார்முலா. தனுஷ் மற்றும் அனிருத் இந்த காம்போ சேர்ந்தாலே அது ஹிட் தான் என்னும் இலக்கணத்தை வகுத்தது. 3 படத்தின் ஆல்பம் ஹிட் ஆனதும், Wunderbar ஸ்டுடியோஸ் தயாரித்த படங்களிலும் இந்த DNA காம்போ அசத்தியது. மொட்டை மாடி கம்போசிங், கையில சிப்ஸு என DNA இசை அணிவகுப்பில் எதார்த்தம் அதிகம். இதுவே காலப்போக்கில் ரசிகர்களின் எமோஷனாக மாறியது. தனுஷின் 25-வது படம் வேலையில்லா பட்டதாரி. டைட்டில் கார்டு வரும் போதே ரசிகர்களை கொண்டாடத்தில் ஈடுபட செய்தது தான் இந்த DNA மேஜிக். 

இந்நிலையில் தனுஷ் 44 படத்தின் அறிவிப்பை அவர்களது ஸ்டைலில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஐந்து வருடங்களுக்கு பிறகு DNA காம்போ. அனிருத் ஆன் போர்ட் என்ற செய்தி வெளியானதும் கொண்டாட துவங்கிவிட்டனர் ரசிகர்கள். தனுஷ் கைவசம் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். 

தர்பார் படத்திற்கு பிறகு அனிருத் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத். சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். ப்ரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். செல்லம்மா பாடல் வெளியாகி சாதனை ஓட்டம் செய்தது. 

அநேகமாக இந்த ஊரடங்கிலேயே இந்தியன் 2 பாடல் கம்போசிங்கிற்கும் ரெடியாகியிருப்பார் அனிருத் என்றும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் முறையாக சியான் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை என்ற ருசிகர தகவலும் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் சியான் 60 திரைப்படம் தான் அது. இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. பேட்ட படத்திற்கு பிறகு அனிருத்துடன் கார்த்திக் சுப்பராஜ் இணைவதால் இந்த படத்தின் ஆல்பமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.