இந்திய திரையுலகின் ரசிகர்களின் நாடியறிந்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இசையமைப்பாளர் அனிருத். பாடல்களில் கேமியோ, கான்செர்ட் மேடைகளில் நடனம் என ஜொலித்து கொண்டிருப்பதால் ராக்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் அறிமுகமானவர், இன்று பிஸியான இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பெருமையையும் பெற்றுள்ளார். 

இன்று இந்திய கிரிக்கெட் வீரர், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் என்பதால், பேட்ட பாணியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் அனிருத். இதில் சிறப்பு என்னவென்றால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் டைட்டில் கார்டு கொண்டு தன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். பேட்ட படத்தில் இடம்பெற்ற மரணமாஸ் பாடலின் தீம் கொண்டு இந்த வீடியோ உள்ளதால், இணையத்தை தெறிக்க விடுகிறது. இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தோனி ரசிகர்கள். 

இந்த லாக்டவுனில் தன் ஸ்டூடியோவிலே அதிக நேரத்தை செலவு செய்து வருகிறார் நம் ராக்ஸ்டார். தொடர்ந்து அவர் பணிபுரியும் படங்களுக்கு நல்ல ட்யூன்களை அமைத்து வருகிறார். கடைசியாக அனிருத் இசையில் சூப்பர்ஸ்டார் நடித்த தர்பார் திரைப்படம் வெளியானது. 

இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்திற்கு இசையமைத்தார். குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

முதல் முறையாக சியான் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை என்ற ருசிகர தகவல் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் சியான் 60 திரைப்படம் தான் அது. இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. பேட்ட படத்திற்கு பிறகு அனிருத்துடன் கார்த்திக் சுப்பராஜ் இணைவதால் இந்த படத்தின் ஆல்பமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார் அனிருத். சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். ப்ரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பாடல்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

அநேகமாக இந்த ஊரடங்கிலேயே இந்தியன் 2 பாடல் கம்போசிங்கிற்கும் ரெடியாகியிருப்பார் அனிருத் என்றும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.