கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படம் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் அல்போன்ஸ் புத்திரன். நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடித்த இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி சிறப்பான வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து பிரேமம் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் நடித்த அனைவரும் இப்போது முன்னணி நடிகையாக இருக்கின்றனர். மலையாளத்தில் இப்படம் வெளியானாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகள் கழித்து துவங்கினார். தான் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். பாட்டு என பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். 

யுஜிஎம் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பு. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் அல்போன்ஸ். திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படும். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது பகிர்கிறேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் அல்போன்ஸ் பெயரைச் சொல்லி துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் மர்ம நபர்கள் பேசி வருவதாகக் கூறியுள்ளார். அந்த போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: சில எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் அழைத்தால், என்னிடமே அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதனால் இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் ஏமாந்து விடவேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எதையும் அனுப்ப வேண்டாம். இது ஒரு மோசடி வேலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

அல்போன்ஸ் கூறிய இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் வினீத், சில நாட்களுக்கு முன் தனது பெயரை சொல்லி, சிலர் மோசடியில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தார். அது பற்றி போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரனும் கூறியிருப்பது கேரள சினிமாதுறையினரிடம் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.