நடனம், நடிப்பு, ஸ்டைல் என ரசிகர்களை ஈர்த்து வருபவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன். இவர் நடிக்கும் படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வருகிறது. தமிழகத்திலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இப்போது நடித்து வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இந்த படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. 

செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் புஷ்பா ராஜ் - படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திர பெயர் - அறிமுகம் என்று ஒரு டீஸரை வெளியிட்டனர். பாகுபலி உள்ளிட்ட அனைத்துப் படங்களின் டீஸர் சாதனையையும் புஷ்பா உடைத்தது. அத்தனை அமர்க்களமான ஆக்‌ஷன் டீஸராக அது இருந்தது. காரணம், இயக்குநர் சுகுமார். படத்தை பிரேம் பை பிரேம் இழைத்து உருவாக்குவது சுகுமாரின் ஸ்டைல்.

புஷ்பாவில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்குப் படம். இவர்கள் தவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில் என பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசை.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. 

கொரோனா தீவிரமாகியுள்ள நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் படப்பிடிப்பு என்ற கணக்கில் ஹைதராபாத்தில் புஷ்பா படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதுகுறித்து பதிவு செய்த அவர், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன், என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். எனது ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்...பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை இந்தியாவில் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காததே வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்தும் B.1.617 வகை கொரோனா குறித்தும் உடனடியாக கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவம் அதிகமாக உள்ளது. முகக்கவசம்....நம் உயிர் கவசம் என்பதை உணரும் நேரம் இது... மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலாட்டா குழுமம் கேட்டுக்கொள்கிறது.