நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. 

சமீபத்தில் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 10 நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருமே கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதியானது. 

இதனையடுத்து ஐஸ்வர்யா ராய், குழந்தை ஆரத்யா உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கும் முடிவு பாசிட்டிவ் என்று தான் வந்தது. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை மட்டும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமல் அதிகமாக இருந்ததால், ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஐஸ்வர்யா ராயின் கணவரான நடிகர் அபிஷேக் பச்சன் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். 

தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. ஐஸ்வர்யாவும் ஆரத்யாவும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். நானும் அப்பாவும் மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து இருக்கிறோம் என்று என்பதையும் தெரிவித்துள்ளார். விரைவில் இருவரும் குணமாகி வீடு திரும்புவீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.