ஷார்ப்ஸ் பெரில் என்ற ஆங்கில தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை பாயல் கோஷ். அதன் பின் பிரயாணம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். ஊசரவல்லி ஆகிய தெலுங்கு படங்களிலும், பட்டேல் கி பஞ்சாபி ஷாதி என்கிற இந்தி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாயல் கோஷ் பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று மாலை பேட்டி அளித்தார். அதில் பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் கஷ்யப் தன்னை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடன் உறவு கொள்ள முயன்றதாக கூறினார். தடுக்க முயன்ற தன்னிடம் இது எல்லாம் சாதாரணம் என்று அனுராக் கஷ்யப் கூறியதாக பாயல் தெரிவித்தார்.

பாயல் கோஷ் தெரிவித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாயல் பேசுகையில், இது குறித்து நான் பல காலமாக பேச நினைத்தேன். இன்றோடு இதற்கு ஒரு வழி செய்யணும் என்று பேசிவிட்டேன். மீ டூ இயக்கம் தீவிரமான போது நான் இது குறித்து ட்வீட் செய்தேன். ஆனால் அந்த ட்வீட்டால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்று கூறி அதை நீக்குமாறு பலர் தெரிவித்தனர். 

என் மேனேஜரும் அதையே தான் சொன்னார். அதன் பிறகு நான் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன். பின்னர் அனுராக் கஷ்யப் என்னை ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டார். நான் வீடியோவில் அனுராக் கஷ்யப் மீது புகார் தெரிவித்தது பற்றி என் பெற்றோரிடம் கூறவில்லை. அவர்களிடம் முன்பே தெரிவித்தால் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள். அந்த வீடியோ வைரலான பிறகு என் பெற்றோர் போன் செய்து என்னை திட்டினார்கள்.

வெர்சோவாவில் இருக்கும் அலுவலகத்தில் வைத்து தான் அனுராக் கஷ்யபை முதன்முறையாக சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் வீட்டில் வைத்து சந்தித்து பேசினேன். படங்கள், சினிமா துறை பற்றி பொதுவாக பேசினோம். அதன் பிறகு என்னை தன் வீட்டிற்கு வருமாறு அவர் அழைத்தார். நானும் சென்றேன், அப்பொழுது அவர் வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு கொள்ள முயன்றார். நான் கத்தி கூச்சலிடவில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். ஒரு வழியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்.

பின்னர் அவர் எனக்கு சில முறை மெசேஜ் அனுப்பி வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அவர் அனுப்பிய மெசேஜுகள் தற்போது என்னிடம் இல்லை. அந்த சம்பவம் நடந்த பிறகு நான் பல முறை போனை மாற்றிவிட்டேன். மேலும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதை நான் வீடியோவும் எடுக்கவில்லை என்றார்.

பாயலின் புகார் தொடர்பாக அனுராக் கஷ்யப் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பாயலின் புகார்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார். தான் பாயலிடம் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டது இல்லை என்றும், அது போன்ற செயல்களை தான் ஊக்குவிப்பதும் இல்லை என்கிறார் அனுராக் கஷ்யப்.

சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் பல திரைப்பிரபலங்களின் பெயர் தாறுமாறாக அடிபடுகிறது. 2020-ம் ஆண்டில் நம் செவிகளுக்கு எட்டிய மோசமான செய்திகளில் இதுவும் ஒன்று. பல நடிகர் நடிகைகளின் உண்மையான முகம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வருகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள்.