இந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். 2011-ம் ஆண்டில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து உலகளவில் உள்ள ரசிகர்களை பெற்றார். சென்ற வருடம் நித்யா மேனன் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். அக்ஷய்குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்த மிஷன் மங்கள் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ஓடிடி தளத்தில் ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் அபிஷேக் பச்சன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது நித்யா மேனன் அளித்த பேட்டியில் ஒன்றில் பாடி ஷேமிங் பற்றி பேசியுள்ளார். அதாவது உடல் எடையை வைத்து கேலி செய்பவர்களுக்கு தக்க பதிலடி தந்துள்ளார். அவர் பேசுகையில், 
என் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது என்று யாரும் கேட்க மாட்டார்கள்? பல கேள்விகள் இருக்கிறது. உடல்ரீதியாக ஏதாவது பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவதா? இதுபோன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அதை எதை பற்றியும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. 

எல்லா பிரச்சனைகளையும் வெளியில் கொண்டு வந்து உடைத்து பெரிய பிரச்சினையாக பேச நான் விரும்புவதில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நீங்களே அதை சமாளித்து அதிலிருந்து வெளியில் வரவேண்டும். நான் இது போன்ற விஷயங்களை எங்கும் பேசுவதில்லை. ஆனால் சினிமா துறையில் இருப்பவர்கள் என்னைப் பார்க்கும் விதம் அதிக எடையுடன் இருக்கிறேனா அல்லது எடை இல்லாமல் இருக்கிறேனா என்று தான் பார்க்கிறார்கள் என நித்யாமேனன் குறிப்பிட்டுள்ளார்.

பிற மொழிகளில் பிஸியாக இருக்கும் நித்யா மேனன், குறைந்த அளவிலான தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருமுகன், மெர்சல் ஆகிய படங்களுக்குப் பிறகு கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்திருந்தார். 

உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த இந்த படத்தில் ஓய்வுபெற்ற போலீசாக நடித்திருந்தார் நித்யா மேனன். சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக் கொண்ட ஹீரோயின் அதிதி ராவை காப்பாற்ற பார்வையற்ற உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்யும் போது, அவருக்கு உதவி செய்யும் பாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது.