அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்தார். அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். நடிகை அதிதி பாலனுக்கு சில விருதுகளும் கிடைத்தது. இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் ஒரு பாடலில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அதில் அதிகம் கவனிக்கப் படவில்லை. 

அருவி படத்துக்குப் பிறகு அதிதிக்கு தமிழில் வாய்ப்பில்லை என்றாலும் இப்போது அவர் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் படவெட்டு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அதிதி பாலன். அந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் கோல்ட் கேஸ் என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் அதிதி பாலன். இந்த படத்தின் படிப்பிடிப்பு கேரளாவில் சில நாட்களுக்கு முன் தொடங்கி இருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நிபந்தனைகளுடன் இதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தை தனு பலக் இயக்குகிறார். சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ள பிருத்விராஜ், இன்னும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து வேறொரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த படத்தில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை அதிதி பாலன் கடந்த சில நாட்களுக்கு முன், கொடைக்கானலில், ஏரிச் சாலை பகுதியில் முகக்கவசம் இன்றி காரில் பயணம் செய்தார். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுகாதரத் துறையினர் முகக் கவசம் அணியாததற்காக, அவருக்கு அபராதம் விதித்தது இருந்தனர்.

கோல்டு கேஸ் படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர்.எஸ். விமல், மெய் நிகர் தொழில்நுட்பத்தில் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் பிருத்விராஜ். மகாவீர் கர்ணா படத்தைத் தொடர்ந்து தர்ம ராஜ்யா என்ற திரைப்படத்தை இதே போல மெய் நிகர் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை பிருத்விராஜே தனது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.