நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்ய தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியது. தமிழக அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு. விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கொளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என்றுள்ளனர்.

விவேக் மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. விவேக் இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். சென்னைக்கு செல்ல முடியாத அவரது உறவினர்கள் தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்து பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து வருகின்றனர்.