இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இந்தி திரையுலகமே இந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Actor Sushant Singh Rajput Commits Suicide

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த சுஷாந்த், ஆரம்ப பள்ளிப்படிப்பை பீகாரில் படித்தார். சுஷாந்த்தின் அம்மா 2002ல் இறந்ததும், சுஷாந்த் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு டில்லி இஞ்சினியரிங் கல்லூரியில், பி.இ - மெகானிக்கல் இஞ்சினியரிங் ப‌டித்தார். படிக்கும்போதே சினிமா மீது ஆர்வம் ஏற்பட.. தொடர்ந்து படிப்பில் சுஷாந்த்தால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் மூன்றாம் ஆண்டோடு, கல்லூரிப்படிப்பை நிறுத்திவிட்டு சினிமாமீது கவனம் செலுத்தினார். 2008ல் டிவி சீரியல் மூலமாக எல்லோருக்கும் பரிட்சயமானார் சுஷாந்த். அதன்பிறகு நிறைய வாய்ப்புகள் இவரது திறமைக்கு கிடைத்தன. தோனி -அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததன்மூலம் மிகப்பெரிய பிரபலமானார். பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். 

Actor Sushant Singh Rajput Commits Suicide

இவரது "Dil Bechara" என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

 சுஷாந்த் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வந்ததும், மும்பைக்கு  குடிபெயர்ந்தார். அங்கு அவர் தனியாகவே வசித்து வந்தார். இவரது சகோதரி, மிது சிங் மாநில அளவிலான கிரிக்கெட்டராக இருந்தவர்.

கடந்த சில தினங்களுக்கு முன், சுஷாந்த்தின் முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான்,மும்பையில் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது நெஞ்சே உடைந்து விட்டது என மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த நிலையில் இருப்பது குறித்த தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தெரிவித்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவரது தற்கொலை அதிர்ச்சி ஏற்படுத்திய சூழ்நிலையில் ஏன் தற்கொலை போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 

Actor Sushant Singh Rajput Commits Suicide

நேற்று இரவு சுஷாந்தை சந்திக்க அவரது நண்பர்கள், அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர் என்ற தகவல் நமக்கு தெரியவந்துள்ளது.இது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சுஷாந்த,  இன்ஸ்டாகிராமில் அவருடைய அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக பேசியிருந்தார்.  ஏழு வருடங்களாக நடிகை அங்கிதாவுடன் இருந்த காதலையும் 2016ல் முடித்துக்கொண்டார் சுஷாந்த். இந்நிலையில், ரியா கபூரை இவர் காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முன்னாள் காதலிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது, அதனால் மன உளைச்சலுக்குள்ளாகி தனிமையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

உலகம் சுற்ற வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும், குதிரை பழக வேண்டும், விவசாயம் செய்ய வேண்டும் என தன்னுடைய 50 ஆசைகளை பட்டியலிட்டிருந்தார். அதில் பலவற்றை நிறைவேற்றாமலேயே தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில், ''கொரோனா சமயத்தின் நான் மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.. ஆனால் என்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார்''. உடனே சுஷாந்த், ''உங்கள் பெயரில் ஒரு கோடியை நான் கொடுக்கிறேன் என, முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியை கொடுத்திருக்கிறார்.

சுஷாந்த்தின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற ரீதியிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  சுஷாந்த் தன் மேனேஜரின் இறப்புக்கு பிறகு, மிகுந்த மன உழைச்சலில் இருந்ததாக தெரிய வருகிறது. அதற்கான மருந்துகளும் எடுத்திருக்கலாம் என்று தெரியவருகிறது. அதோடு, சுஷாந்த் நடிக்கவிருந்த பல படங்களும் கைநழுவி போக, அதுவும் மன உழைச்சலுக்குள்ளானது. தோனியின் பயோபிக்கில் நடித்ததைப்போல, அப்துல்கலாம், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டவர்களின் படங்களிலும் நடிக்கவிருந்தார் சுஷாந்த். இன்னிலையில்தான், சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். 

சுஷாந்த்தின் இழப்பு இந்திய சினிமாவுக்கே பேரிழப்பு.

ஆக்கமும் , எழுத்தும்  : லோகேஸ்வரி