கடந்த 2002-ம் ஆண்டு ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. எந்த ரோலாக இருந்தாலும் அதை எளிதாக அவரது ஸ்டைலில் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பிரசன்னா திரைக்கு வந்து 18 வருடங்கள் ஆனதை திரை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். தற்போது வரும் படங்களில் வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அண்மையில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஒரு தம்பதி பிரசன்னாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்கள் மகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது குறித்து பிரசன்னாவிடம் தெரிவித்துள்ளனர். ஏழைகளான தங்களால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று பிரசன்னாவிடம் கூறியுள்ளனர்.

அவர்களின் நிலைமையை புரிந்து கொண்ட பிரசன்னா, அந்த சிறுமியை அனுமதித்துள்ள மருத்துவமனைக்கு போன் செய்து விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்திருக்கிறார் பிரசன்னா. இவ்வளவு பெரிய தொகையை பிரசன்னா கொடுத்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் அமைதியாக உதவி செய்த பிரசன்னாவை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். 

பிரசன்னா கைவசம் D 43 திரைப்படம் உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. க்ரைம் திரில்லரான இந்த படத்திற்கு ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்த தீபாவளிக்கு பிரசன்னா நடிப்பில் நாங்க ரொம்ப பிஸி திரைப்படம். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே தீபாவளி விருந்தாக சன் தொலைக்காட்சியில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென் ஆகியோர் நடித்திருந்தனர்.