விஜய் டிவியில் நாடகத்தில் நடித்து குட்டிப்புலி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் பால சரவணன். பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் போன்ற படங்களின் மூலம் வேகமாக வளர்ந்து சென்றார் பால சரவணன். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பால சரவணன், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வியை முன்வைத்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,97,672 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1,07,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 31,142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 13,625 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,76,876 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,651ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் தவிர்த்து கர்நாடாகாவில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் விரைவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எண்ணி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரைப் பார்த்தாலும் முழு ஊரடங்கு வரப்போகிறது. இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க...அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது. கேள்வி என்னனா முழு லாக்டவுன் வருமா வராதா? குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊரடங்கு அறிவிப்பை கடைசியில் அறிவித்தால் தினசரி கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.