கடந்த 2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கொடி. துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் இரட்டை வேடம் ஏற்று நடித்த இந்த படத்தில் முதல் முறையாக வில்லியாக நடித்து அசத்தினார் த்ரிஷா. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காளி வெங்கட், அனுபமா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காவல் அதிகாரியாக மிரட்டியவர் தான் நடிகர் அனில் முரளி. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார் அனில். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. மலையாள தொலைக்காட்சித்துறையில் பணியாற்றிய அனில் முரளி. பின்னர் 1993-ம் ஆண்டு கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஏராளமான மலையாள படங்களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தினார். 

மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிமிர்ந்து நில், தனி ஒருவன், கனிதன், அப்பா, தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக சிபிராஜ் நடித்த வால்டர் திரைப்படம் ரிலீஸானது. இந்நிலையில் நடிகர் அனில் முரளி திடீரென காலமானார்.

கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

அவரது மறைவு மலையாளம் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரண செய்தியை கேட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் பிரித்விராஜ் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்தே திரைப்பிரபலங்களின் இழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.