சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக இருப்பதாகவும், இத்திட்டம் தேவை தானா என்றும் உச்சநீதிமன்றம் சராமாறியாக கேள்வி எழுப்பி உள்ளது.

Supreme Court

சென்னை - சேலம் இடையே பசுமை வழிச் சாலை என்ற பெயரில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்திற்காக, தமிழக அரசு பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதனையடுத்து, இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேலம் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக மத்திய நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை - சேலம் இடையே எதற்காக 8 வழிச் சாலை போடப்படுகிறது என்று முதல் கேள்வியை எழுப்பியது. மேலும், 8 வழிச் சாலைக்காக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், திட்டம் இருக்கிறது என்றால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Indian government

8 வழிச்சாலைக்காக, எதன் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்றும், இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? என்றும், இல்லையென்றால் ஏன் சாலை போட இத்தனை அவசரம் என்றும் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நெத்தியடி கேள்விகளை எழுப்பி உள்ளது.

8 வழிச் சாலைக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் கால தாமதமானால் என்ன செய்வீர்கள் என்று விளக்கம் கேட்ட நீதிமன்றம், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டத்தைத் தொடங்கி விடுவீர்களா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக, இத்திட்டம் குழப்பமாக இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், மத்திய அரசு செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.