1994-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் தி லயன் கிங். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் முறையில் தயாராக்கி வழங்கியுள்ளனர். புகழ் பெற்ற இயக்குனர் ஜான் ஃபேவரூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழில் வெளியான இப்படத்திற்கு அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, சிங்கம் புலி, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.

 

lion

 

காட்டை ஆளும் முஃபாசா எனும் சிங்கத்தின் மகனாக வரும் சிம்பா, தனது சித்தப்பாவான ஸ்காரின் கொடிய பிடியிலிருந்து தப்பித்து மீண்டும் காட்டிற்கு எப்படி அரசனாகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்கரு. கருணையற்ற மனதுடன் இரையைத் தேடி அலையும் கழுதப்புலி கூட்டத்துடன் சேர்ந்து ராஜ்ஜியத்தை ஸ்கார் கைப்பற்றுகிறதா ? அல்லது சிம்பாவுக்கு சவால் விடுகிறதா என்பது கதை நகர நகர தெரியவருகிறது.

 

dsds

 

முதலில் கதாநாயகன் சிம்பா பற்றி பதிவிட வேண்டும். துருதுரு அரசனாக இருக்கும் சிம்பா, தந்தையின் இழப்பிற்கு பிறகு தன் நாட்டை விட்டு செல்கிறது. வெளியேறிய சிம்பாவிற்கு டிமோன், பும்பா என இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வாழ்வின் ரகசியமான "ஹகுனா மட்டாடா" எனும் மந்திரத்தை கற்றுத்தருகிறார்கள். சிம்பாவின் காதலியாக வருகிறார் நாலா எனும் இளவரசி.

 

sasa

 

படத்தில் பின்னணி குரல் தந்த அனைத்து நடிகர்களையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக சாசு எனும் மறக்கொத்திப்பறவைக்கு நடிகர் மனோபாலா குரல் தந்துள்ளார். சாசுவின் காமெடிக்கு துளியும் பஞ்சமில்லை. முதல் பாதியில் சாசு ஈர்த்தது போல் இரண்டாம் பாதியில் டிமோன் மற்றும் பும்பா காமெடியில் ஸ்கோர் செய்கிறது. துணை நடிகர்களான ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம்புலியின் எதார்த்த நகைச்சுவையின் அருமை தெரிகிறது.

 

sasa

 

தொழில்நுட்ப ரீதியாக அதிக வளர்ச்சி பெற்ற இந்த படத்தில் 3டி குறைபாடுகள் ஏதும் இல்லை. பின்னணி இசையும் சூழலுக்கு ஏற்றார் போல் அமைகிறது. அடுத்தடுத்த காட்சிகள் இப்படி தான் வரக்கூடும் என்று யூகித்தாலும், சுவாரஸ்யமாக இருந்தது. பாடல்கள் சலிப்பை ஏற்படுத்தினாலும், பின்னணி இசை நம்மை சிலிர்க்க வைக்கிறது.

 

ss

 

ஸ்காரின் வில்லத்தனம், சிம்பா உயிரோடிருப்பதை அறியும் குரங்கின் புத்திசாலித்தனம் போன்ற காட்சிகள் பலே. பக்கபலமாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் வரும் காட்டு தீ விபத்து, ஜங்கிள் புக் படத்தை நினைவு படுத்துகிறது. மொத்தத்தில் அக்காலத்து ஹிட் MGR படம் பார்த்தது போல் இருக்கிறது. அப்பாவை கொன்ற வில்லனை மகன் பழிவாங்குதல் என வழக்கமான டெம்ப்லேட்டாக இருந்தாலும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ஐந்தறிவு மிருகம் எப்படி பேசும் ? ரொமான்ஸ் செய்யும் என்று லாஜிக் பார்ப்பவர்களுக்கு டிஸ்கவரி சேனலே சிறந்த ஒன்றாகும்.