சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்று 10 ஜனவரி 2019 வெளியான படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார், சனத், மேகா ஆகாஷ், முனீஸ்காந்த் ராமதாஸ் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருக்கின்றனர். 2.0 படம் மூலம் தீபாவளி கொண்டாடத்தை தொடர்ந்து, பேட்ட திரைப்படம் மூலம் பொங்கல் கொண்டாட்டத்தை துவங்கிவைத்துள்ளார் ரஜினிகாந்த்.

திரையரங்கை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றும் திறன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டுமே உள்ளது என மீண்டும் நிரூபித்திருக்கிறார் தலைவர். 6 முதல் 60 வரை என அனைத்து தரப்பு ரசிகர்களும் நிரம்பி வழிந்து திரையரங்கின் வாசலில் காணப்படுகின்றனர். 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்' இந்த டைட்டில் கார்ட்டுக்கு கிடைத்த விசில் மற்றும் கைத்தட்டலை பெற இன்னொரு நடிகன் பிறந்து வரவேண்டும்.

ஹாஸ்டல் வார்டனாக காளி என்ற ரோலிலும் பிளாஷ்பாக்கில் பேட்டை வேலன் என்ற ரோலில் அசத்தியிருக்கிறார். இம்மனிதனுக்கு 70 வயதா என்று கேட்கும் வகையில் எனெர்ஜி ஏத்துகிறார் சூப்பர்ஸ்டார். 80'ஸ் 90'ஸ் ரஜினியை கண்முன் கொண்டு வந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிற்கு நன்றி. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளுக்கு ஏற்றார் போல் ரஜினிகாந்திற்கு டஃபு தர, அதுக்கு அவர் தான் பொறந்து வரணும்.

மங்கலமாக வரும் சிம்ரன் சிறுது நேரம் தோன்றினாலும் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார். சரோ எனும் பாத்திரத்தில் வரும் த்ரிஷாவின் நடிப்பு போற்றப்படவேண்டியது. மாலிக்காக வரும் சசிகுமார் படத்திற்கு கூடுதல் வலு என்றே கூறலாம். தங்களுக்கு தந்த பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர் பாபி சிம்ஹா மற்றும் குரு சோமசுந்தரம். ரசிகர்கள் எதிர்பார்த்தது இதுதான். ரஜினி ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து அதற்கு ஏற்றார் போல் இயக்கிய கார்த்திக் சுப்பராஜை வரிக்கு வரி பாராட்டினால் தகும்.

சினிமாவை தாண்டிய ஒரு சுவாரஸ்யத்தை பொங்கல் விருந்தாக படைக்கின்றனர் பேட்ட படக்குழுவினர். சாதி ஒழிப்பு, கலப்பு கல்யாணம், முதுமை காதல், மணல் கொள்ளை, மறைமுக அரசியல் டயலாக்ஸ் போன்ற கருத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சூப்பர்ஸ்டாருடன் ஒரே ஃபிரமில் தோன்றியது மிகப்பெரிய கைத்தட்டலை தந்தது. குறிப்பாக விஜய் சேதுபதி ஹிந்தி பேசும் அழகை ரசித்தவர்கள் பலர். நவாஷுதின் சித்திக் போன்ற நடிகரை எப்படி கையாளவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக அவருக்கும் டப்பிங் பேசியவரை இத்தருணத்தில் பாராட்ட வேண்டும்.

ஒவ்வொரு ரசிகனையும் தனது பாடலின் மூலம் திரையரங்கில் நடமாட வைத்திருக்கிறார் அனிருத். தியேட்டர் செலிப்ரேஷன் பாடல்கள் அழகாக கொண்டு சேர்த்துருக்கிறார். பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் கூடுதல் வலு என்றே கூறலாம். ஆர்ட் டைரக்டர் சுரேஷ் செல்வராஜின் செயல் ஹாட்ஸ் ஆஃ. கல்லூரி சூழலை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிற லைட் செட்டிங்ஸ் வைத்து, தனது சிறப்பான கேமரா ஷாட்ஸை மேற்கொண்டிருக்கிறார் சினிமாடோகிராஃபர் திரு. ஜிகர்தண்டா படத்தில் சங்கிலி முருகன் தோன்றியது போல், பேட்ட படத்தில் மகேந்திரனை கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.குறும்படத்தில் துவங்கி இன்று தான் ரசித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் செய்து, அதில் வெற்றியையும் கண்டுருக்கும் கார்த்திக் சுப்பராஜை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.