ஒரு சில படங்களே, பார்வையாளனை திரைக்குள் இழுத்துப் போடும் வல்லமை கொண்ட படமாக இருக்கும். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்...இல்லை இல்லை பாடம் நேர்கொண்ட பார்வை. 

 

nerkondapaarvai

 

மீரா, ஃபாமி, ஆண்ட்ரியா எனும் மூன்று பெண்கள் தங்களது நண்பர்களுடன் ஒருநாள் இரவு உணவருந்த ரெசார்ட்டிற்கு செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சம்பவம், அதன் தொடர்ச்சியாக இப்பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள்… சட்டமும், காவல்துறையும் சேர்ந்துகொண்டு இப்பெண்களை காயப்படுத்துகிறது. அதிலிருந்து எவ்வாறு வெளி வருகிறார்கள், யார் காப்பாற்றுகிறார்கள், பிறகு என்னென்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.

பரத் சுப்ரமணியமாக திரையில் காட்சியளித்து விருந்தளிக்கிறார் தல அஜித். வாதாடுதல் போன்ற காட்சிகளில் உண்மை வக்கீலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் அஜித். குறிப்பாக பிரிவு எண் கூறும் காட்சிகளில் அஜித்தின் கம்பீரம் பிரமாதம். உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஓர் நடிகர், இப்படியொரு கதை களத்தை தேர்ந்தெடுத்தது பாராட்டிற்குரிய காரியம். சண்டை காட்சியில் வரும் பைக் சீன் மற்றும் முகத்தில் பயம் தெரியுதா வசனம் போன்றவற்றிற்கு விசில் பறக்கின்றன.

சண்டை காட்சிகளில் மற்றும் அகலாதே போன்ற இடங்களில் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஃபீல் தெரிகிறது. நீதிமன்ற வளாகத்துக்குள் கதை செல்கையில் தான் விறுவிறுப்பு அதிகமாகிறது. அக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தனது நடிப்பால் ஈர்க்கிறார். போன ஜென்மத்தில் நிஜ வக்கீலாக பிறந்திர்பார் போல. எதிர்கட்சி வக்கீல் சத்யமூர்த்தியாக சிறப்பாக நடித்திருந்தார். ஜூனியர் பாலையா மற்றும் டெல்லி கணேசின் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு இருந்தது.

மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவை பெண்ணை குணக்கேடு உள்ளவளாக சித்தரிக்க பயன்படும் அளவிற்க்கு ஆண்கள் மீது பயன்படுத்தப்படுவதில்லை என்பதை பல இடங்களில் சுளீரென்று உரைக்க இப்படக்குழுவினர் மேற்கொண்ட பார்வையே இந்த நேர்கொண்ட பார்வை.

நோ- என்ற ஒற்றை வார்த்தையில் இருக்கும் விளக்கத்தை தெளிவாக எடுத்துக்கூறிய விதம் பலே. "அது ஒரு வார்த்தையல்ல, ஒரு வாக்கியம்” என கூறியபின் தரும் விளக்கம்தான் படத்தின் வெற்றிப்பாதை. முடியாது, என்று ஒரு பெண் கூறினால் அது முடியாது என்று தான் அர்த்தம். அது யாராக இருந்தாலும் சரி, முகம் தெரியாதவராக, காதலியாக, நண்பராக, பெண் தோழியாக , பாலியல் தொழிலாளியாக , அல்லது மனைவியாக என யாராக இருந்தாலும் , அவளுடைய விருப்பமில்லாமல் அணுகுவது பெருங்குற்றம் எனும் சீரான கருத்தூசியாக செலுத்தியுள்ளனர்.