மீசைய முறுக்கு,நட்பே துணை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள நான் சிரித்தால் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.கெக்க பெக்க என்ற குறும்படத்தின் கருவை கொண்டு இயக்குனர் ராணா இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.

கவலையோ,கஷ்டமோ வரும் நேரத்தில் சிரிக்கும் நோயுடைய ஹீரோ தொலைந்து போன தன் நண்பனை தேடும் பணியில் ரௌடியிடம் மாட்டிக்கொள்கிறார்.அப்போது போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் வில்லன் ஹீரோவை கொல்லத்துடிக்கிறான்.வில்லனிடம் ஹீரோ எப்படி தப்பிக்கிறான் என்ற கதையா காமெடி கலந்து ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் ராணா.

ஹிப்ஹாப் தமிழா ஆதி அப்பாவி இளைஞராக காந்தி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப்போகிறார்.சோகமான காட்சிகளில் கஷ்டப்பட்டு அவர் சிரிக்கும் காட்சிகள் அருமை.இருந்தாலும் இன்னும் ரொமான்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தலாம்.தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்து இளைஞர்களின் பல்ஸ் அறிந்து செயல்படுகிறார் ஆதி.

ஐஸ்வர்யா மேனன் அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயினாக வந்து ஹீரோவுடன் காதல் காட்சிகளிலும்,பாடல்களிலும் வந்து செல்கிறார்.ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி தன்னுடைய கேரக்டரை உணர்ந்து பிரமாதமாக நடித்துள்ளார்.வில்லன்களாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவி மரியா கதாபாத்திரங்கள் பெரிதாக ரசிக்கும்படி அமையவில்லை.

யோகி பாபு,ஜூலி,எருமசானி விஜய்,முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களை தவிர படத்தில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனதில் ஒட்டும்படி கதாபாத்திரங்கள் அமைக்கப்படாதது சற்று பின்னடைவு தான்.

ராணா தனது 20 நிமிட குறும்படத்தை பெறும்படமாக்கியுள்ளார் காட்சியமைப்புகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு செம காமெடி படத்தை கொடுத்திருக்கலாம்.தனக்கான டார்கெட் ஆடியன்ஸான இளைஞர்களை இந்த படம் ஈஸியாக ஈர்த்துவிடும்.காமெடி காட்சிகள் அங்கங்கே ஒர்க்அவுட் ஆகின பல காமெடி நட்சத்திரங்கள் உள்ளடங்கிய இந்த படத்தில் காமெடி பெரிதாக ஒர்க்அவுட் ஆகாதது வருத்தம் தான்.

வாஞ்சிநாதன் படத்திற்கு தேவையான கேமரா வேலைகளை கனகச்சிதமாக செய்துள்ளார்.ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்கும் படத்தின் ஓட்டத்திற்கு கைகுடுத்துள்ளன.ஹிப்ஹாப் தமிழா பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.