இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கல்லூரி மாணவராக இருக்கும் ரகு(தனுஷ்), லேகா (மேகா ஆகாஷ்) எனும் இளம் நடிகையை கல்லூரி படப்பிடிப்பில் சந்திக்கிறார். பார்த்த நொடியே இருவர் மத்தியில் காதல் மலர்கிறது. இதன் நடுவே லேகாவை வைத்து பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிதக்கிறார் தயாரிப்பாளர்/இயக்குனர் குபேரன். இவரிடமிருந்து லேகாவை காப்பாற்றும் வேலையில், பிரிந்த தனது சகோதரர் திருவை சந்திக்கிறார் நாயகன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதைச்சுருக்கம். 

கொஞ்சம் காஃபி - கொஞ்சும் ஆங்கிலம், புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும். இந்த படத்தில் சற்று கூடுதல் மைன்ட் வாய்ஸ் வைத்து சலிப்படைய செய்கிறார். காதல் காட்சிகள் கச்சிதமாக தெரிந்தாலும், சண்டை காட்சிகள் சொல்லும் படி இல்லை. 

காப் அணிந்த நாயகர்களும், காவியம் போல் திகழும் நாயகிகளும் இவர் படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதெல்லாம் நாம் அறிந்தவையே. மேகத்தில் பொழியும் மாரி போல் படம் முழுக்க பயணித்துள்ளார் நடிகை மேகா ஆகாஷ். தனுஷின் அண்ணனாக வரும் சசிகுமாரின் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கூட மண்வாசனை தெரிகிறது. அதை சற்று தவிர்த்திருக்கலாம். 

இரண்டாம் பாதியில் வரும் ஆயுத கையாளுதல் போன்ற விஷயம் எத்தனை பேருக்கு விளங்கும் என்பது தெரியவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் ஒருகுறை கூற இயலாது. அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் ஜி.வி.எம்.

பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசை மற்றும் பாடல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் டர்புகா ஷிவா. மொத்ததில் அச்சம் என்பது மடமையடா படத்தையே சற்று பட்டி டிங்கரிங் செய்தது போல் இருந்தது. படத்தின் நேர ஓட்டம் பெரிதாக இருந்ததால் வெப் சீரிஸ் பாணியில் உள்ளது போல் தெரிந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் திருப்தி செய்யுமா என்பது சந்தேகம் தான்.