ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், ரசிகர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் வெளியான படம் பிகில். கால்பந்து விளையாட்டு தான் கடவுள் என்று வாழும் பிகில் ஆகிய மைக்கேல், தந்தை மற்றும் நண்பனின் கனவை நனவாக்க தேர்ந்தெடுக்கும் தேடல் தான் இந்த பிகில் படத்தின் கதைச்சுருக்கம். இதுதான் படத்தின் முதல் பாதி என்றும் கூறலாம்.

கோச் மைக்கேலாக கோட் அணிந்து அணியை வழிநடத்தும் காட்சிகளாகட்டும், துடிப்பான கால்பந்து ஆட்டக்காரர் பிகில் ஆகட்டும் தனது கேரக்டரில் பிரமாதம் காட்டியுள்ளார் தளபதி விஜய். இருந்தாலும் ரசிகர்களின் மனதை, தந்தை ராயப்பன் தனது பாத்திரத்தால் சூறையாடி செல்கிறார். ஏரியாவில் பெரிய தலக்கட்டாக கேட்டு இருந்தாலும், பொறுப்புள்ள தந்தையாக மிரட்டியுள்ளார். குறிப்பாக கம்பீரம் கலந்த வடசென்னை தொனியில் திக்கிக்கொண்டு கட்டி புடி டா... என்று சொல்லும் போது நம் தந்தையை உணரலாம். ராயப்பன் பாத்திரத்திற்கு அப்படி ஒரு சிறப்பை சேர்த்துள்ளார் விஜய்.

பெயரில் மட்டுமல்லாமல் திரையிலும் ஏஞ்சலாக, ஹீரோவிற்கு இறுதி வரை துணையாக இருக்கும் நாயகியாக, ஃபிசியோவாக அசத்தியுள்ளார். அட்லீ படத்தில் ஓர் ஹீரோயின் உயிர் தப்பிப்பது இதுவே முதல் முறை. கதிர், யோகிபாபு, ஆனந்த ராஜ், தேவதர்ஷனி, டேனியல் பாலாஜி, ஞானசம்பந்தம் போன்ற குணச்சித்திர நடிகர்கள் கூடுதல் வலு சேர்த்துள்ளனர். 12 வருடம் கழித்து தளபதியுடன் இணைந்து கலக்கியுள்ளார் சின்ன கலைவானர் விவேக். யோகிபாபுவை பெரிதளவில் பயன் படுத்த வில்லை என்று கூறினால் மிகையாது.

ப்ரோடக்ஷன் டிசைனர் முத்துராஜ் அவர்களின் பங்களிப்பு ஏராளம். பிரம்மாண்ட செட் அமைத்து, விளையாட்டு அரங்கத்தின் அட்மாஸ்பியரை திரையில் கொண்டு சேர்த்தார்.

விளையாட்டை ஊழல் களமாக மாற்றி, அதை தொழிலாக செய்யும் குழு தலைவராக வருகிறார் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப். இப்படிப்பட்ட வில்லனிடமிருந்து எப்படி பெண்கள் அணியை வழிநடத்தி வெற்றி பெறச் செய்கிறார் என்பதே படத்தின் இரண்டாம் பாதி. தனது பாடல்கள் மூலம் நம்மை ஆச்சரியத்தில் தள்ளிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடல் காட்சியில் தோன்றி இன்பதிர்ச்சி தந்துள்ளார். நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம ஜனம் வெறித்தனம்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், விவேக்கின் வரிகள், ரசிகர்களின் மனதை வருடிச்செல்கிறது. ஸ்டண்ட் கலைஞர்களை கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக மாற்றியது தூள். சி.ஜி. எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக இருந்ததது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள், உதாரணத்திற்கு வில்லனுக்கு அறிவுரை கூறுவது, எதிர்ப்பார்த்த கிளைமாக்ஸ் போன்ற விஷயங்கள் பழைய டெம்ப்ளேட்டாக தெறிகிறது.

ரசிகர்களின் நாடியை சரியாக கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. மெசேஜ் உள்ள கமெர்ஷியல் படத்தை சரியாக செலுத்தியுள்ளார். சில காட்சிகள் வழக்கம் போல் தெரிந்தாலும், படத்தை சேதப்படுத்தவில்லை. ஒரு குழு வெற்றி பெறுவதற்கு திறமையை விட ஒற்றுமை தான் முக்கியம் என்ற வசனம் பலே. ப்ரோஃபஷனல் கால்பந்து வீரர்கள் போல் நடிப்பது எளிது. ஆனால் ஃபிரீஸ்டைல் போன்ற வித்தைகளை விஜய் இறக்கிய விதம் பிரமாதம். ரசிகர்கள் விரும்பும் தளபதியை காண்பித்தது மற்றும் பெண் சுதந்திரம்.. இந்த இரண்டு விஷயம் தான் அட்லீ அடித்த இரண்டு கோல்கள்.

திரையுலகில் மண்ணாக இருந்தாலும், ரசிகர்களின் அண்ணனாக இருப்பதால் தான்,, ஓர் தளபதியாக 27 வருடம் நம்மை என்டர்டெயின் செய்கிறார் விஜய். கனவுகளை துரத்தி சாதிப்பதற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் தேவையில்லை என்று அட்லீ ஊதிய பிகிலே இந்த பிகில். நிச்சயம் இந்த பிகில் தீபாவளி சரவெடியாய் மக்கள் மத்தியில் வெடிக்க கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.